யாரும் நினைத்துப்பார்க்க முடியாத, செய்யத் துணியாத, அதிரடி முடிவுகளைத்தான் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து வருகிறார்.
அப்படித்தான், 133 கோடி மக்கள் தொகையுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயிர்களை காக்க, ''21 நாள் தனிமை வளையத்துக்குள்'' நாட்டையே கொண்டு வரும் அதிரடி முடிவை அறிவித்தார்.பெரும் ஜனத்தொகை கொண்ட இந்தியா இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்று சர்வதேச சமூகமே கவலை கொண்டது. மோடி அறிவிப்புக்கு பல்வேறு நாடுகளும் பாராட்டு தெரிவித்தன. ஜாதி, மத பேதமில்லாமல், கட்சி பாகுபாடில்லாமல் பிரதமர் பின்னால் இன்று தேசமே அணிவகுத்து நிற்கிறது.
மக்கள் உயிரும், அவர்களின் பொருளாதாரமும் ஒரு அரசுக்கு இரண்டு கண்கள். அதுபோலவே, ஊரடங்கால், பொருளாதாரம் முடங்கிப்போன அடித்தட்டு மக்களுக்காக, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவிற்கான உதவி திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்று பொருளாதார வளம் நிறைந்த வளர்ந்த நாடுகள், கொரோனா நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தங்கள் குடிமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது வியப்பல்ல.
ஆனால், உலகளாவிய பொருளாதார மந்தநிலையால், நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் உத்தேசித்த அளவிற்கு நேரடி மற்றும் மறைமுக வரிகள் அரசின் கஜானாவிற்கு வந்து சேரவில்லை.பொருளாதார வீழ்ச்சி, வரி வருவாயில் சுணக்கம் போன்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலும், கொரோனாவால் வாழ்க்கை முடங்கிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அடுத்த மூன்று மாதங்களுக்கான முக்கிய நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மத்திய நிதியமைச்சர் ஏற்கனவே வியாபார நிறுவனங்களின் வருமான வரி, ஜி.எஸ்.டி., தாக்கல் உள்ளிட்டவைகளில் சலுகைகள் அறிவித்திருந்தார். வங்கிகள் குறித்த அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்களின் அன்றாட பொருளாதார தேவைகள் குறித்து பல்வேறு நலத்திட்டங்களை தற்போது அறிவித்திருக்கிறார்.
ஊரடங்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் எளிய மக்களுக்காக, பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் கோடி அளவிற்கு உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக போராடும், வெள்ளை உடை வீரர்களான - மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், அவர்கள் வாழ்க்கை நலனில் அக்கறை கொள்ளும் விதத்தில். ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது உயிரை பணயம் வைத்து, மக்களின் உயிரைப் பாதுகாக்கும் இவர்களின் சேவைக்கு இது ஒரு நல்ல மகுடம்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. தினசரி உழைப்பில் வாழும் இந்த மக்களுக்கு, இப்போது, அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ விருப்பமான பருப்பு வகைகள் கொடுக்கப்படும் 8.69 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் 5 கோடி பேருக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். ஜந்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 8.3 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு சமையல் எரிவாயு இலவசம். மூத்த குடிமக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கான அடுத்த 3 மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும். அதாவது, 100 பேருக்கு குறைவான ஊழியர் உள்ள நிறுவனங்களில் 90% மேல், ரூபாய் 15 ஆயிரத்திற்கும் கீழ் சம்பளம் இருந்தால் இந்த திட்டத்தில் பயனடையலாம்.வருங்கால வைப்பு நிதியிலிருந்து 75% பணத்தை முன்பணமாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்களுக்கு பிணையம் எதுவுமில்லாமல் கடன் வசதியாக 20 லட்சம் வரை வழங்கப்படும்.
இது 7 கோடி குடும்பங்களுக்கு உதவும்.மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நாளிதழ்கள், டிவி சேனல்கள், ரேடியோ, சோஷியல் மீடியாக்கள் சென்றடையாத அன்றாடம் வேலைக்கு ஓடி, வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களுக்கு மத்திய அரசின் இந்த திட்டங்களை சொல்வதும் ஒரு சமூக பொறுப்புணர்வுதான்.உரிய பயனாளிக்கு அரசின் இந்த திட்டம் இருப்பதை தெரியப்படுத்தி, அவர்கள் அந்த பயனை பெறும் வகையில் உதவுவதில் நம் அனைவரது பங்கும் இருக்க வேண்டும்.
இந்த கட்டுரையை இந்த பயனாளிகளில் பெரும்பாலானோர் படிக்க வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஜாதி, மதம், மாநில பேதமில்லாமல் கொரோனா ஒழிப்புக்கு இந்திய இதயங்கள் ஓரணியில் திரண்டதைபோன்ற எழுச்சி, இதிலும் வரவேண்டும். நம் அருகில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, அவர்களுக்கு இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை தெரிவிப்பதில்தான் திட்டத்தின் முழு வெற்றி உள்ளது. ஏழைகளுக்கு இன்னும் நிவாரணங்கள் அளிக்கவில்லை. திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று ஊடகங்கள் மூலமாக பேசும் அரசியல் விமர்சகர்களும், எதிர் கட்சிகளும் மற்றும் ஆளும் கட்சியினரும் கூட்டாக சேர்ந்து இந்தத் திட்டத்தின் விவரங்கள் குறித்தும், அணுகுமுறை குறித்தும் உரிய பயனாளிகளுக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு கூட்டு முயற்சியில்தான் திட்ட வெற்றி உள்ளது.எந்தத் திட்டமும் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்காது.
இது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பொருந்தும். இப்போது கடினமான சூழலில், திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகளை கண்டுபிடித்து கொண்டிருப்பதைவிட, திட்டத்தின் முழு பயனளிக்கும் வகையில் பங்காற்றினால் மக்கள் சேவை மகேசன் சேவையாக கருதப்படும். அப்போதுதான் வைரசால் ஏற்பட இருந்த உயிரிழப்பை தேசமே இணைந்து தடுத்ததுபோல, வருவாய் இன்மையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கமுடியும்.ஏழைகள் ஏற்றம்பெற வேண்டிய நேரமிது. தேசமே வா, நேசமுடன் இணைவோம்.
பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புகள்: தேசமே எழு... 'கொரோனா'வை வெல்வோம்