மும்பை: மும்பையில் ஒரே மருத்துவமனையில் 26 நர்ஸ்கள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள மாநகராட்சி, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் ஒரு வார இடைவெளியில் பணிபுரிந்து வரும் 26 நர்ஸ்கள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி), மருத்துவமனை பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து இரண்டு முறை, எதிர்மறை முடிவுகள் வரும் வரையில் மருத்துவமனைக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து, கூடுதல் நகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி கூறுகையில், மருத்துவமனையில் இருந்து இவ்வளவு அதிகமான வழக்குகள் வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும், என்றார்.
பாதிக்கப்பட்ட நர்ஸ்கள், வைல் பார்லேயில் உள்ள மருத்துவமனைக்கும், இரு டாக்டர்கள் செவன்ஹில்ஸிலும், ஒருவர் மஹிமில் உள்ள எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதில், 70 வயதான மாரடைப்பு நோயாளிக்கு நோய்த்தொற்றின் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த இரண்டு நர்ஸ்களும் பரிசோதனை செய்தனர். பாதிக்கப்பட்ட நர்ஸ்களின் சகாக்கள் மற்றும் அறை தோழர்களை தனிமைப்படுத்த நிர்வாகம் தவறியதால் தொற்று வேகமாக பரவுவதாக மருத்துவமனை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.